உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்த்தில் மார்க் சூக்கர்பர்க்

Mark-Zuckerberg-Becomes-World-Third-Richest-Person

உலகின் பிரபல சமூக வலைத்தளமாக அறியப்படும் ஃபேஸ்புக் தளத்தின் நிறுவனர் உலக பணக்காரர்கள் பட்டியலில் வாரென் பஃபெட்-ஐ பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

தற்சமயம் உலக பணக்காரர்கள் பட்டியல் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளனர். பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் நிறுவன பங்குகள் 2.4 சதவிகிதம் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அதன் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.
உலக பணக்காரர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவர்கள் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். உலகின் மூன்றாவது பணக்காரர் ஆன மார்க் சூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு தற்சமயம் 8160 கோடி டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது வாரென் பஃபெட்-ஐ விட 37.3 கோடி டாலர்கள் அதிகம் ஆகும்.
எட்டு மாதங்களில் இல்லாத அளவு ஃபேஸ்புக் பங்கு மதிப்பானது மார்ச் 27-ம் தேதி நிலவரப்படி வெகுவாக குறைந்து 152.22 டாலர்களாக இருந்தது. அதன்பின்னர் பங்குகளின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்ற பங்குச்சந்தையில் ஃபேஸ்புக் பங்கு மதிப்பு 203.23 டாலர்கள் ஆக அதிகரித்து இருக்கிறது.
உலகில் தொழில்நுட்ப துறை வளர்ச்சி மற்ற துறைகளை விட அதிகரித்து இருப்பதாக ப்ளூம்பர்க் தெரிவித்து இருக்கிறது. இந்த பட்டியலில் உலகின் 500 பணக்காரர்கள் இடம்பெற்று இருக்கும் நிலையில், நியூ யார்க்கில் ஒவ்வொரு நாளும் பங்கு சந்தை நிறைவுறும் வேளையில் பட்டியல் மாற்றம் செய்யப்படுகிறது.

You might also like More from author