ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு., 80 அடியை தாண்டியது

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதே போல கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடரும் கன மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று 122.7 அடியாக இருந்தது. நேற்று அணைக்கு 39 ஆயிரத்து 737 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 41 ஆயிரத்து 961 கன அடியாக அதிகரித்தது. அணை முழு கொள்ளளவை நெருங்கி உள்ளதால் அணையில் இருந்து இன்று காலை 3 ஆயிரத்து 929 கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டது.

இதேபோல 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் இன்று 81.46 அடியாக இருந்தது. நேற்று அணைக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து 43 ஆயிரத்து 400 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து 45 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதேபோல ஹாரங்கி, ஹேமாவதி அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.

கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள 49 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு சீறி பாய்ந்து வருகிறது.

கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் ஓரிரு நாளில் அந்த அணையில் இருந்து சுமார் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு திறக்கும் பட்சத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து 80 முதல் 85 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நேற்று ஒகேனக்கலில் 50 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 48 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

6-வது நாளாக இன்றும் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கரையில் நின்று காவிரியில் செல்லும் தண்ணீரை வேடிக்கை பார்த்து வருகிறார்கள். வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இந்தாண்டு அதிக அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று 38 ஆயிரத்து 916 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 46 ஆயிரத்து 613 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடி நீர் தேவைக்காக 1000 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு பல மடங்கு கூடுதல் தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று 75.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடிக்கும் மேல் உயர்ந்து 79.55 அடியாக இருந்தது. பிற்பகல் நீர்மட்டம் 80 அடியை தாண்டியது. கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களிலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணைக்கு இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும்.

இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதனால் அடுத்த வாரத்தில் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓரிரு நாளில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.  #MetturDam #Cauvery

You might also like More from author