‘மோடி தன்னிச்சையான அமைப்புகளை அழிக்கிறார்’- பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்வீட்டால் சர்ச்சை

”காங்கிரஸ் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பலமுறை தவறாகப் பயன்படுத்தியுள்ளது.மோடி தன்னிச்சையான அமைப்புகளை அழிக்கிறார்’ என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்வீட்டால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, ”இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பலமுறை தவறாகப் பயன்படுத்திய காங்கிரஸ், நான் தன்னிச்சையான அமைப்புகளை அழிப்பதாக என்று குற்றம் சாட்டுகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இதைச் சரியான முறையில் தெரிவிக்காத பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கம், ”காங்கிரஸ் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பலமுறை தவறாகப் பயன்படுத்தியுள்ளது… மோடி தன்னிச்சையான அமைப்புகளை அழிக்கிறார்: பிரதமர்” என்று ட்வீட் செய்தது.

இதனைத் தவறாகப் புரிந்துகொண்ட நெட்டிசன்கள், இந்த ட்வீட்டை வைரல் ஆக்கி வருகின்றனர். ”கடந்த நான்கரை ஆண்டுகளில் இப்போதுதான் பிரதமர் அலுவலகம் உண்மையைப் பேசிவயுள்ளது” என்று நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்றொருவரோ, ”பாஜக ஏராளமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார். ”தேர்தலுக்கு முன்பாகவே மோடி தன்னுடைய தவறை ஒத்துக்கொண்டார் போல” என இன்னொரு நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

You might also like More from author