கோட்டையில் கொடியேற்ற புத்தம் புது தேசிய கொடி வரவழைப்பு

ஆகஸ்டு 15-ந் தேதி நாட்டின் 71-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.சென்னையில் தலைமை செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

இதையொட்டி கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தன்று கொடிக் கம்பத்தில் பறக்க விடுவதற்காக மகாராஷ்டிராவில் உள்ள காதிபவன் மூலம் தயாரிக்கப்பட்ட புத்தம் புதிய தேசிய கொடி சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 8 அடி, அகலம் 12 அடி.

இது குறித்து காதிபவன் அதிகாரிகள் கூறியதாவது:-

மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் காதியில் தயாரிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தேசிய கொடிகளை தான் ஏற்ற வேண்டும்.தேசிய கொடிகள் மகாராஷ்டிரா மாநிலம்  நான்டெக், மும்பை போர்விலி பகுதிகளில் உள்ள மத்திய அரசின் காதி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படுகிறது.

தேசிய கொடி, 4 இழைகளால் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது மழை வெயில் காலத்திலும் கிழியாது.தேசிய கொடிக்கு தனி அளவுகள் உள்ளன. ஐ.எஸ்.ஐ. சான்றிதழும் பெற வேண்டும். அந்த வகையில் சென்னையில் உள்ள காதிபவன் மூலம் தேசியக் கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

You might also like More from author