நிதின் கட்காரி மட்டுமே துணிச்சல் கொண்டவர் – ராகுல் காந்தி பாராட்டு

புதுடெல்லி:

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி கடந்த 2-ந் தேதி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பா.ஜனதா தொண்டர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டும் எனவும், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யாத ஒருவரால் நாட்டை கவனிக்க முடியாது என்றும் கூறினார்.

முன்னதாக ‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைவர்களை மக்கள் அடிப்பார்கள்’ என்று கட்காரி கூறியிருந்தார். இவை அனைத்தும் பிரதமர் மோடியை மனதில் வைத்தே கட்காரி கூறியதாக காங்கிரசார் கூறி வருகின்றனர். மேலும் பிரதமர் பதவிக்கு கட்காரி குறி வைப்பதாகவும் பேச்சு நிலவுகிறது.

இந்த நிலையில் கட்காரியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘கட்காரிஜி வாழ்த்துகள். பா.ஜனதாவில் நீங்கள் மட்டும்தான் சிறிது துணிச்சல் உள்ளவர். இதைப்போல ரபேல் மற்றும் அனில் அம்பானி, விவசாயிகள் துயர் மற்றும் ஜனநாயக அமைப்புகள் சீரழிப்பு போன்றவை குறித்தும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இது பா.ஜனதாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like More from author