ஏவுகணை சோதனை தளத்தை வடகொரியா நிரந்தரமாக மூட முடிவு

1953–ம் ஆண்டு கொரியப் போர் முடிந்த பின்னர் வட கொரியாவும், தென் கொரியாவும் பகை நாடுகளாக விளங்கி வந்தன. இந்த நிலையில் தென்கொரியாவில் பியாங்சாங் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே நட்புறவு மலரத் தொடங்கியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் இரு நாட்டு எல்லையில் உள்ள பன்மூன்ஜோம் கிராமத்தில் சந்தித்து பேசினர். 
இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்தது. அதைத் தொடர்ந்து தென்கொரியா எடுத்த முயற்சியின் பலனாகத்தான் வட, தென் துருவங்கள் போன்று விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப்பேசினர்.
அப்போதுதான் கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உறுதி அளித்து, டிரம்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் பின்னர் அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான வடகொரியாவின் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற போதிலும், அந்த நாடு அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதித்து பார்க்கவில்லை.
இந்த நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் ஏற்கனவே 2 முறை பேச்சு வார்த்தை நடத்தி  உள்ள நிலையில் 3–வது சுற்று பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், மனைவி  கிம் ஜங் சூக்குடன் நேற்று பியாங்யாங் நகருக்கு 3 நாள் பயணமாக சென்றார். வடகொரியா சென்ற மூன் ஜே இன்னு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பியாங்யாங் நகரில், இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இரு தலைவர்களும் இன்று கூட்டறிக்கை வெளியிட்டு, நிருபர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறியதாவது: “ ஏவுகணை என்ஜின் சோதனை தளம் மற்றும் ஏவுதளம் ஆகியவற்றை நிரந்தரமாக அழிக்க வடகொரியா ஒப்புக்கொண்டு உள்ளது. அமெரிக்கா உறுதியான நடவடிக்கைகளோடு வரும் பட்சத்தில், நியோங்பியோனில் உள்ள பிரதான அணு உலை கூடத்தை அழிக்க தயராக இருப்பதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது” என்றார்.
கொரிய தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு கூட்டறிக்கையில் கையெழுத்திட்டனர். ஆனால், இந்த கூட்டறிக்கையில் உள்ள விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இரு தலைவர்களும் கூட்டு அறிக்கையில் கையெழுத்திடும் காட்சிகள் தென்கொரிய சேனல்களில் ஒளிபரப்பானது. ஆவணங்களை காட்டும் போது இரு தலைவர்களும் புன்னகை தழுவியபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் பிறகு வெளியாகும் என்று கொரிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  விரைவில் தென்கொரியாவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author