நீடிக்கும் அரசியல் குழப்பம் வெனிசூலா எண்ணெய் நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடை

வாஷிங்டன்,

எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வரும் எதிர்க்கட்சியினர், தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி நிகோலஸ் மதுரோ அதிபர் பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டின் அதிபராக 2-வது முறையாக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பலர் பலியாகினர்.

இடைக்கால அதிபர்

இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவரான நாடாளுமன்ற சபாநாயகர் ஜூவான் குவைடோ (வயது 35), தன்னை தானே வெனிசூலாவின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டார்.

அவருக்கு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து, அவரை வெனிசூலாவின் இடைக்கால அதிபராக அங்கீகரித்துள்ளன. அதோடு, அதிபர் நிகோலஸ் மதுரோ தனது அதிகாரத்தை ஜூவான் குவைடோவிடம் ஒப்படைக்கும்படியும் அந்நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே ஜூவான் குவைடோவுக்கு ஆதரவு அளித்ததற்காக அமெரிக்க உடனான அனைத்து உறவுகளும் துண்டிக்கப்படுவதாக அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்தார்.

பொருளாதார தடை

இந்த நிலையில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு அழுத்தம் தரும் வகையில் வெனிசூலா அரசுக்கு சொந்தமான ‘பிடிஎஸ்விஏ’ எண்ணெய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

வெனிசூலாவுக்கு எதிரான இந்த நடவடிக்கையை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் மற்றும் நிதித்துறை மந்திரி ஸ்டீவன் மனுசின் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

அமெரிக்கா நிபந்தனை

எனினும் அதிபர் நிகோலஸ் மதுரோ தன்னுடைய அதிகாரத்தை இடைக்கால அதிபர் ஜூவான் குவைடோவுக்கு வழங்கினால் பிடிஎஸ்விஏ எண்ணெய் நிறுவனத்தின் மீதான பொருளாதார தடை திரும்ப பெறப்படும் என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.

இந்த பொருளாதார தடை மூலம் ‘பிடிஎஸ்விஏ’ எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான 7 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு ஏற்றுமதியில் 11 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

You might also like More from author