காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார், பிரியங்கா

நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி கடந்த மாதம் 23–ந் தேதி நியமிக்கப்பட்டார்.

மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய மாநிலமாக அமைந்துள்ள உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவருக்கு தரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அங்கு கூடுதல் இடங்களை கைப்பற்ற குறிவைத்துத்தான் இந்த அதிரடி நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பிரியங்கா நேரடி அரசியலில் குதித்தார்.

பிரியங்கா, டெல்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு காரில் வந்தார். அவரை கட்சி தொண்டர்கள் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு அவரது சகோதரரும், கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் அறைக்கு அடுத்த அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு அமர்ந்து அவர் கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார். கட்சிப்பணிகளை கவனித்தார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார்.

இந்த கூட்டத்தில் பிரியங்காவும் கலந்து கொள்கிறார்.

You might also like More from author