ஊழலின் தலைநகரம் தெலுங்கானா-ராகுல் காந்தி ஆவேசம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐதராபாத்தில் உள்ள செரி லிங்கம்பல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆகியோர் அணுகுமுறை ஒரே மாதிரியாக உள்ளது. இருவரும் பொய்யான, வெற்று வாக்குறுதிகளையே அளித்தனர்.ஆதிவாசிகள், தலித்துகளுக்கு நிலம் கொடுக்கப்படும் என்று சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை அவர் நிறைவேற்றவில்லை.படுக்கை அறையுடன் கூடிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று கூறினார். 4 ஆண்டு ஆட்சி முடிந்த பிறகும் 5 ஆயிரம் வீடுகள் கூட கட்டி கொடுக்கப்படவில்லை.

தெலுங்கானா மாநிலம் இன்று ஊழலின் தலை நகரமாக உருவாகி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் நில அபகரிப்பு நடக்கிறது. ஒரு குடும்பத்தின் (முதல்வர் சந்திரசேகரராவ்) ஆட்சியே நடக்கிறது. ஒரு குடும்பம் மட்டுமே அனைத்து பயன்களையும் அடைகிறது.தெலுங்கானாவில் கடந்த 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று தெலுங்கானா நிதிநிலை கடன் நிலைக்கு சென்று விட்டது.

தெலுங்கானா அரசு துறைகளில் ஒரு லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. ஆனால் சந்திரசேகரராவ் அரசு 10 ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்பி உள்ளது.மோடி அரசு 5 அடுக்கு ஜி.எஸ்.டி. வரியை விதித்து ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கிறது. இது உண்மையிலேயே கொள்ளை வரி. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஒரே விகித ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படும்.

தற்போது வர்த்தகர்கள் ஒவ்வொரு மாதமும் பல்வேறு விதமான படிவங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றுவோம்.இவ்வாறு ராகுல் கூறினார்

You might also like More from author