ராமேசுவரம் மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு!

rameshwaram-fishermen-13-person-arrested-near-neduntheevu

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 523 விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு சென்றனர்.

இவர்களில் ராமேசுவரத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களிடம் இங்கு மீன்பிடிக்கக்கூடாது. உங்கள் பகுதிக்கு செல்லுங்கள் என்று எச்சரித்தனர்.

மேலும் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்கள், வலைகளை சேதப்படுத்தினர். இதனால் மீனவர்கள் வழக்கம் போல் அவசரம் அவசரமாக கரை திரும்ப முற்பட்டனர்.

அப்போது எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தாக கூறி கென்னடி, அருளானந்தம் ஆகியோரது படகுகளில் வந்திருந்த ராமேசுவரத்தை சேர்ந்த வினோ (48), நேதல் (47), வில்பர்ட் (36), ஜான்போஸ் (35), மூக்கன் (34), ஜஸ்டின் (20), மலைச்சாமி (50), ராஜாராம் (45), இன்னாசி (28), ஜேசு (50), மணி (42), மூக்கையா (40), மில்டன் (40) ஆகிய 13 மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

You might also like More from author