சபரிமலையில் இன்று நடை அடைப்பு

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது.
அதுமுதல் ஐயப்பனை தரிசிப்பதற்காக வந்த பெண்கள், பக்தர்களால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற முஸ்லிம் பெண்ணும், ஆந்திராவை சேர்ந்த டி.வி. பெண் நிருபர் கவிதா கோஷியும் கடந்த 19-ந் தேதி சபரிமலைக்கு வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை, 18-ம் படி அருகே வைத்து அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் திரும்பி சென்றனர்.
இதைப்போல நேற்று முன்தினம் சபரிமலைக்கு செல்ல முயன்ற தலித் பெண் ஆர்வலர் ஒருவரும், பக்தர்களின் போராட்டம் மற்றும் கனமழை காரணமாக பம்பையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
இவ்வாறு சபரிமலை விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆந்திராவை சேர்ந்த புனித யாத்திரை குழு ஒன்று நேற்று சபரிமலைக்கு வந்தது. இந்த குழுவில் இருந்த வாசந்தி (வயது 40), ஆதித்ய சேஷி (42) உள்பட சில பெண்களை பம்பை அருகே தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள், இந்த 2 பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு அனுமதி மறுத்தனர். அந்த குழுவில் இருந்த 50 வயதுக்கு மேற்பட்ட பிற பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
சபரிமலையில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் மோதல் காரணமாக சபரிமலை வட்டாரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இன்று (திங்கட்கிழமை) வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

You might also like More from author