பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்தது: பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தகவல்

2018-19 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது என்று பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மார்ச் முதல் வாரத்தில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்தது. இதில், குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை, வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சம் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

தமிழக சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதி யமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக, அவர் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

பட்ஜெட் அறிவிப்பை வாசிக்கும் முன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிதியமைச்சர் ஓபிஎஸ் புகழாரம் சூட்டினார்.

பட்ஜெட் உரையை வாசித்த துணை முதல்வர் ஓபிஎஸ், ”2011-12 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 63,178 ஆக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் மடிக்கணினி வழங்குவதற்காக 1362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை விலையில்லாமல் வழங்க 1,656 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

You might also like More from author