தமிழகத்தில் பன்றி காய்ச்சல்:4 பெண்கள் பலி

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் திடீரென பரவியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டன. தமிழக சுகாதாரதுறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.

சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டன. இருப்பினும் பன்றிக் காய்ச்சல் வைரசின் வீரியம் குறைய வில்லை. அது கடும் தாக்கத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று ஒரே நாளில் பன்றிக் காய்ச்சல் 4 பெண்களின் உயிரை பறித்துள்ளது. மதுரையில் 2 பெண்களும், நாகர்கோவில், விழுப்புரத்தில் 2 பெண்கள் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் அடக்கம்.

 

4 பேரை பலி வாங்கிய பன்றிக் காய்ச்சல் தமிழகம் முழுவதுமே பரவலாக பரவியுள்ளது. காய்ச்சல் பாதிப்பால் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு வயது பெண் குழந்தையும், 2 பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு ஆணும், பெண்ணும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கரூரை சேர்ந்த 69 வயது முதியவரும், ஈரோட்டை சேர்ந்த 9 வயது சிறுமியும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 37 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சாரதா என்ற பெண் உள்பட 2 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சல் பாதித்த 39 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இரட்டை குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You might also like More from author