‘ஸ்வைப்பிங்’ திருடர்கள் நூதன வழிப்பறி உஷார்!!

கத்தியை காட்டி பணம் பறிப்பு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் கடந்த காலமாகி விட்டன. இப்போதெல்லாம் திருடர்கள் ஸ்வைப்பிங் கருவியுடன் வந்து கத்தியை காட்டி மிரட்டி, டெபிட் கார்டில் இருந்து பணத்தை பறித்து செல்கின்றனர். இப்படி ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. 

டில்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பிராந்திய விற்பனை அதிகாரியாக பணியாற்றுபவர் ரமேஷ் திரிவேதி, 31. இவர் வாட்ச் நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற பெங்களூரு வந்து இருந்தார். கடந்த 4ம் தேதி இரவு பயிற்சி முடித்து தங்கும் இடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ஜீவன் பீமா நகர் என்ற பகுதியில் அவர் நடந்து சென்ற போது, பைக்கில் வந்த இரண்டு பேர் மறித்தனர். திரிவேதியிடம் அப்போது 470 ரூபாய் மட்டுமே இருந்தது. அந்த தொகையை அவர்களிடம் கொடுத்து விட்டார்.

அடுத்து அவர்கள் செய்த சம்பவம் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாங்கள் வைத்து இருந்த ஸ்வைப்பிங் கருவியை எடுத்த அவர்கள் திரிவேதியை மிரட்டி அவரின் டெபிட் கார்டை பறித்தனர். அவரிடம் இருந்து ரகசிய குறியீடு எண்ணை பெற்ற அவர்கள், 8,000, 4,000, 4,400 ரூபாய் என மூன்று முறை பணத்தை பெற்றுக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து திரிவேதி போலீசில் புகார் செய்து விட்டு அடுத்த நாளே முதல் விமானம் மூலம் டில்லிக்கு சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You might also like More from author