மத்திய பாதுகாப்பு படையை அனுப்ப தயார்-உள்துறை செயலர் உறுதி

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து செல்கின்றனர்.
இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின
பின்னர் மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவேரி மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொண்டர்களை கட்டுப்படுத்த போலீசாரும் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தினர். அத்துடன் சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு திடீரென மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். இவரும் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டனர். மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோரும் ஸ்டாலினுடன் வருகை தந்தனர். முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் அவர்கள் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் திரும்பி சென்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்  மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க மு.க. ஸ்டாலின் குடும்பத்தார் வலியுறுத்தியதாகவும் 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு உரிய கவுரவம் வழங்கவும் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதை தொடர்ந்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ஆகியோர்  சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தேசிய தலைவர்கள் பலர் தமிழகத்துக்கு வர வாய்ப்பு உள்ளதால், அதற்குரிய ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக தமிழக தலைமை செயலர், மத்திய உள்துறை செயலருடன் தொலைபேசியில் பேசினார்.
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக உள்துறை செயலருக்கு பேக்ஸ் அனுப்பி உள்ளதாக தகவல். கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில், மத்திய பாதுகாப்பு படையை அனுப்புவதாக உள்துறை செயலர் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You might also like More from author