தூய்மையே சேவை” விழிப்புணர்வு பிரச்சார இரதம் ஆட்சியர் கந்தசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்

இந்தியா முழுவதும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ் கடந்த 15ந் தேதி முதல் வரும் 2ந் தேதி வரை தேசிய அளவில் “தூய்மையே சேவை” என்ற நோக்கத்தில் தூய்மை சேவை இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனையட்டி இந்தியா முழுவதும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது இடங்கள், அரசு அலுவலக வளாகங்கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்கள், அரசு மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள், சுற்றுலாத் தலங்கள், ஆன்மீகத் தலங்கள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறவுள்ளது.  இவ்வியக்கத்தில், தொண்டு நிறுவனங்கள், ஊரக உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சேவை மனப்பான்மையுடன் தங்களது பங்களிப்பினை அளிக்கவுள்ளனர். இவ்வியக்கத்தில் பொதுமக்களும் தங்களை பெருமளவில் ஈடுபடுத்தி நாட்டின் தூய்மை காப்பதில் பெரும்பங்கெடுத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதன் அடிப்படையில் முன்தினம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ’தூய்மையே சேவை” இயக்கம் குறித்த உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு, இப்பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தினை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்ட “தூய்மை இரதம்” திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊரகப் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக இயக்கப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு மாதமும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் பழக்கம் இல்லாத நிலையை தொடர ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுடன் இணைந்து மகளிர் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பங்கேற்புத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டும் வருகிறது, மேலும், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மூலமும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.215.84 கோடி மதிப்பீட்டில் 1,96,305 தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டும், நடப்பாண்டு 2018-2019-இல் ரூ.23.13 கோடி மதிப்பீட்டில் 19,273 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், தற்போது 2013-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கழிப்பறைகள் குறித்த கணக்கெடுப்பில் விடுபட்ட குடும்பங்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் குறைந்த வட்டியிலோ அல்லது வட்டி ஏதும் இல்லாமலோ கழிவறை கட்டிக்கொள்ள சிறுகடன் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குடும்பங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சியில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் உள்ள ஊக்குநர்கள் மூலம் கழிப்பறையின் அவசியம், திறந்த வெளியில் மலம் கழித்தலினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றும், அவமான நடை, தூண்டுதல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் கழிப்பறை கட்டிக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

You might also like More from author