கருணை அடிப்படையில் வேலை கேட்டு திருவண்ணாமலை ஜமாபந்தியில் டிஆர்ஒவிடம் மனு

கிராம உதவியாளராக இருந்து மரணமடைந்த வாரிசுக்கு அரசு வேலை கேட்டு திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் 4வது நாள் நடந்த ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.
வருவாய்த்தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய ஜமாபந்தியில் வருவாய் நிர்வாக கணக்குகள் தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய்த்துறை தொடர்பான புகார்கள், குறைகளுக்கு தீர்வு காணப்படும். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுக்காக்களில் இந்த ஆண்டுக்கான வருவாய்த்தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி  திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகத்தில் தொடங்கி 4வது நாளான முன்தினம் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது
தச்சம்பட்டு உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய்த்தீர்வாயம் நடந்தது. இதில் தலையம்பள்ளம், சக்கரதாமடை நரியாப்பட்டு, பறையம்பட்டு, பழையனூர், கல்லொட்டு, அத்திப்பட்டு, கண்டியாங்குப்பம், வேளையம்பாக்கம், தச்சம்பட்டு அல்லிகொண்டாப்பட்டு, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 147 கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமியிடம் வழங்கினர். அப்போது பெருமணம் கிராமத்தைச் சேர்ந்த கிராம உதவியாளராக பணியாற்றி வந்த கு.நன்னி2014ம் ஆண்டு  மரணமடைந்ததையட்டி அவரது வாரிசான மகன் ந.விக்னேசுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கேட்டு ஜமாபந்தியில் அவரது குடும்பத்தினர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட டிஆர்ஒ இதுகுறித்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கருணை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேபோல 5வது நாளான (புதன்கிழமை) மங்கலம் மற்றும் தச்சம்பட்டு உள்வட்டங்களுக்குட்பட்ட நவம்பட்டு, பெரியகல்லப்பாடி, பெருமணம், தேவனூர், ஆருத்திராப்பட்டு, பனையூர், வள்ளிவாகை, தெள்ளானந்தல், குன்னியந்தல், துர்க்கைநம்மியந்தல், கிளியாப்பட்டு, வடஆண்டாப்பட்டு, குண்ணுமுறிஞ்சி, ஆர்ப்பாக்கம், நூக்காம்பாடி, வி.நம்மியந்தல், ராந்தம், மங்கலம், பாலானந்தல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 346 கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமியிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் கு.மனோகரன், வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார், வேளாண் உதவி இயக்குநர் அரக்குமார், மண்டல துணை தாசில்தார்கள் பி.முருகன், வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சு.பிரேமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் கே.காமேஷ்குமார், திருமலை, அன்பழகன், பாலச்சந்திரன், மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You might also like More from author