கண்டோன்மென்ட் பூமாலை வணிக வளாகத்தில் விற்பனைக் கண்காட்சி

திருச்சிராப்பள்ளி, கண்டோன்மென்ட் பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாநில அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் திட்டமிட்ட விற்பனைக் கண்காட்சியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.எஸ்.வளர்மதி அவர்கள் ஆகியோர்  திறந்துவைத்து பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கு.இராசாமணி, இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் பொருட்டு திட்டமிட்ட கண்காட்சியானது  முதல் 12 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. இக்கண்காட்சி அரங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளான குந்தன் நகைகள், செயற்கை ஆபரணங்கள், தேன் வகைகள், சணல், சணல் பைகள், இயற்கை மூலிகைப்பொருட்கள், கைத்தறி ஆடைகள், தஞ்சாவூர் கைவினைப்பொருட்கள், மென் பொம்மைகள் போன்ற பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளன.

எதிர்வரும் 26.04.2018 வியாழன்கிழமை வரை இக்கண்காட்சியினை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு, திருச்சிராப்பள்ளி உட்பட 13 மாவட்டங்களைச் (தூத்துக்குடி, சிவகங்கை, நீலகிரி, தஞ்சாவூர், கரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், திருநெல்வேலி, நாமக்கல், அரியலூர், மதுரை) சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இக்கண்காட்சி நடைபெறும் நாட்களில் சுய உதவிக்குழு பெண்களின் திறன்களை பறைசாற்றும் நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சாளர்களின் செய்திகள், கலாச்சார நடனங்கள், கர்நாடக மற்றும் மேற்கத்திய இசை நிகழ்ச்சிகள், மிமிக்ரி மற்றும் மேஜிக் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரகப்பகுதியில் 8949 குழுக்களும், நகர்ப்புற பகுதியில் புதிதாக 722 குழுக்களும் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வங்கிகள் மூலம் அவர்களுக்கு கடன் இணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2017-18 ஆண்டில் இதுவரை 5753 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.173.52 கோடி வங்கிக்கடன் பெற்று தரப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நோக்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் கல்லூரிச் சந்தைகள், மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்பனை கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் திட்டம் மூலமாக சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கோடை கொண்டாட்டம், நவராத்திரி திருவிழா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா என்ற பெயர்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் விற்பனை கண்காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதுபோன்ற கண்காட்சிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்று தங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றனர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுவரை 26 கல்லூரிச் சந்தைகள் நடத்தப்பட்டு ரூ.22.20 இலட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பிற மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் பொருட்டு, தேசிய அளவிலான சாராஸ் (ளுயுசுயுளு) விற்பனைக் கண்காட்சி 27.12.2017 முதல் 07.01.2018 வரை 12 நாட்கள் நடத்தப்பட்டு, ரூ.15.00 இலட்சத்திற்கும் மேலாக சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மட்டுமில்லாது அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வருகைப்புரிந்து அரங்குகள் அமைத்துள்ளனர். இப்பொருட்காட்சியினை பார்வையிட வருகைப்புரிந்துள்ள பொதுமக்கள், இளைஞர்கள், சுய உதவிக்குழுவினரை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுடைய பொருட்களை வாங்கி பயன்பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மகளிர் திட்ட அலுவலர் திரு.பி.பாபு, உதவி திட்ட அலுவலர்கள் திரு.முருகதாஸ், திருமதி. சாந்தி, திரு.அறிவழகன், திரு.முத்துப்பாண்டி, திரு.ஜெயராமன், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர் திரு.பாத்திமாசகாயராஜ், முன்னாள் கோட்டத்தலைவர்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர்கள், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like More from author