இரட்டை இலைக்கு லஞ்சம்:குற்றப்பதிவு நகலை பெற்றார் டிடிவி தினகரன்

ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டி.டி.வி. தினகரன் தேர்தல் கமி‌ஷனில் மனுகொடுத்தார். மேலும் சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் கைதானார். இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் நிலை குறித்து டிசம்பர் 5-ந்தேதிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகலை சம்பந்தப்பட்டவர்கள் நாளை (5-ந்தேதி) பெற்றுக்கொள்ளலாம் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் தினகரன் இன்றே டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டு நகலை பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

You might also like More from author