அக்டோபர் 1-ம் தேதி ஐ.நா. பொதுச்செயலாளர் இந்தியா வருகை

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள 21 கடலோரப் பகுதி நாடுகள்  IORA என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான கருத்தரங்கம் அக்டோபர் இரண்டாம் தேதி புதுடெல்லியில் நடைபெறுகிறது.

சர்வதேச அளவில் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் மற்றும் பிறநாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் அழைப்பை ஏற்று இதற்காக நான்கு நாள் பயணமாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் அக்டோபர் 1-ம் தேதி இந்தியா வருகிறார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளும், பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தின் நான்காம் ஆண்டின் துவக்க நாளுமான அக்டோபர் இரண்டாம் தேதியன்று நடைபெறும் சர்வதேச துப்புரவு கருத்தரங்கிலும் அவர் கலந்து கொள்கிறார்.

மேலும், இந்தியாவின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பின் முதல் மாநாட்டையும் அக்டோபர் மூன்றாம் தேதி அவர் துவக்கி வைக்கிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்தரங்கின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே ஆகியோரின் முன்முயற்சியில்  ISA எனப்படும் சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டமைப்பில் இதுவரை 68 நாடுகள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author