பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

9-ம் திருவிழாவான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேரோட்ட திருவிழாவையொட்டி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

10-ம் நாளான இன்று காலை கோவில் எதிரே உள்ள குளத்தில் விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதன் பின்னர் கற்பக விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

இன்று இரவு 11 மணிக்கு ஐம்பெரும் தீர்த்தங்கள் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

பக்தர்களின் வசதிக்காக காரைக்குடி, புதுக்கோட்டை பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் விநாயகரை தரிசிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் செய்திருந்தனர்

You might also like More from author