பெண்கள் சிறை வார்டர் தற்கொலை – காதலன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி:

கடலூர் மாவட்டம் தவளக் குப்பம் அருகே பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் மகள் செந்தமிழ்செல்வி (வயது 23). இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டில் தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு செந்தமிழ்செல்வி பணிக்கு வரவில்லை. சக வார்டர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

இதனால் செந்தமிழ்செல்வியின் வீட்டிற்கு வார்டர்கள் சிலர் இரவு 8 மணி அளவில் சென்றனர். அங்கு அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, செந்தமிழ்செல்வி வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டபடி பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

செந்தமிழ்செல்வியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் செல்லப்பன் மற்றும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவே திருச்சிக்கு புறப்பட்டு வந்தனர்.

மேலும் நேற்று காலை அவரது உறவினர்களும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலரும் திருச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். செந்தமிழ்செல்வி தற்கொலை சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காதல் தோல்வியின் காரணமாக அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதற்கிடையில் தற்கொலை செய்த செந்தமிழ்செல்வியின் தந்தை செல்லப்பன் நிருபர்களிடம் கூறுகையில், “திருச்சி மத்திய சிறை வார்டர் வெற்றிவேல் என்பவர் எனது மகளை காதலித்து விட்டு ஏமாற்றிவிட்டார். வெற்றிவேலின் அண்ணன் கைலாசம், அவரது மனைவியும் எனது மகளிடம் சாதிபெயரை சொல்லி கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனவேதனை தாங்காமல் அவர் தற்கொலை செய்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம்” என்றார்.

மேலும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்திலும் இது தொடர்பாக வெற்றிவேல், அவரது அண்ணன், அண்ணி மீது செல்லப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில் வெற்றிவேல் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது உடலை உறவினர்கள் மாலையில் பெற்று சென்றனர். செந்தமிழ்செல்வி தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

செந்தமிழ்செல்வியும், வெற்றிவேலும் கடந்த ஒரு வருடமாக காதலித்துள்ளனர். இதற்கிடையில் வெற்றிவேலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்துள்ளது. வெற்றிவேலின் அண்ணன் கைலாசமும் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வருகிறார். அவர் மனைவியுடன் வசித்து வருகிறார். வெற்றிவேலும், செந்தமிழ்செல்வியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

செந்தமிழ்செல்வியை வெற்றிவேலுக்கு திருமணம் செய்து வைக்க கைலாசம் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் வெற்றிவேலும் செந்தமிழ்செல்வியை காதலித்து ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் தான் வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. 6-ந் தேதி (அதாவது நாளை) திருமணம் நடைபெற இருந்ததாக கூறுகின்றனர். இதனால்தான் காதல் தோல்வியால் வேதனையடைந்த செந்தமிழ்செல்வி தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது காதலன் உள்பட 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே வெற்றிவேல், அவரது அண்ணன், அண்ணி 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

You might also like More from author